உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-23 22:45 GMT
பொள்ளாச்சி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சியை அடுத்த நல்லூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தலைமையில் போலீசார் கொண்ட பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில், வேனில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வேனை ஓட்டி வந்தவர் பழனியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 22) என்பது தெரியவந்தது. கேரளாவில் கோழி தீவனத்தை விற்பனை செய்து விட்டு, அந்த பணத்தை திருப்பி எடுத்து சென்றது தெரியவந்தது.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமாரிடம் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர்.

நல்லூர் வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது மினி லாரியில் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து லாரியில் இருந்த டிரைவர் கரூரை சேர்ந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்தியதில், கரூரில் இருந்து கேரளாவுக்கு வாழைத்தார் கொண்டு சென்று விற்பனை செய்த பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று கேரளாவில் வாழைத்தார் விற்பனை செய்து விட்டு, திருச்சிக்கு எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை ஆவணங்கள் இல்லாததால் டிரைவர் யூசுப்பிடம் இருந்து பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தியதில் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்