கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முறையீடு

சேந்தமங்கலம் தாலுகா பீமநாயக்கனூரில் கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பு கிராம மக்கள் நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முறையிட்டு மனு அளித்தனர்.

Update: 2019-03-23 22:45 GMT
நாமக்கல்,

சேந்தமங்கலம் தாலுகா புதுக்கோட்டை அருகே உள்ளது பீமநாயக்கனூர் கிராமம். அங்குள்ள பெருமாள் கோவிலில் திருவிழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு கிராம மக்கள் நேற்று நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து இது தொடர்பாக முறையிட்டனர். பின்னர் அவர்கள் புகார் மனு ஒன்றை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பீமநாயக்கனூர் பெருமாள் கோவிலுக்கு சுமார் 2,800 பேர் குடிபாட்டுக்காரர்களாக இருந்து வருகின்றனர். நாங்கள் 2 பேரை பூசாரிகளாக நியமனம் செய்து பூஜைகளை நடத்தி வந்தோம். கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள், வெள்ளி மற்றும் தங்க நகைகள், உண்டியல் தொகை ஆகியவை பூசாரிகள் வசம் உள்ளது.

அவர்கள் வரவு, செலவு கணக்குகள் மற்றும் நகைகளை காண்பிக்காமல் இருந்து வந்ததால் கோவிலில் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி. கேமரா) வைக்கப்பட்டது.

மேலும் வருகிற மே மாதம் திருவிழா நடத்த முடிவு செய்தோம். இதில் ஆத்திரம் அடைந்த பூசாரிகள், ஒரு தரப்பினரை சேர்த்து கொண்டு எந்த ஒரு அனுமதியும் பெறாமல் வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர்.

இதையடுத்து கடந்த 21-ந் தேதி நாங்கள் உதவி கலெக்டரிடம் மனு அளித்தோம். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சேந்தமங்கலம் தாசில்தார் மற்றும் எருமப்பட்டி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணையின்போது குறிப்பிட்ட சிலர் திருவிழாவை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் திருவிழாவை நடத்த கூடாது என கூறினோம்.

ஆனால் குறித்த தேதியில் பூசாரிகள் தரப்பினர் திருவிழாவை நடத்துவார்கள் என்றும், ஆட்சேபனை செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் மிரட்டல் விடுத்தனர். அப்போது புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலரும் உடனிருந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்