கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண் மூளைச்சாவு தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்

கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண் மூளைச்சாவு அடைந்ததால், தவறான சிகிச்சை அளித்ததாக கூறி தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-24 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ஞானசகுந்தலா (வயது 46). இவர்கள் இருவரும் பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 15–ந் தேதி ஞானசகுந்தலா ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக, ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு மருந்து கொடுத்தனர். அந்த மருந்தை வாங்கிவிட்டு அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஞானசகுந்தலாவுக்கு மீண்டும் தலைவலி அதிகமானது. இதனால் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஞானசகுந்தலா மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் அங்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆத்திரம் அடைந்த சிலர் மருத்துவமனையின் கதவு, ஜன்னல் ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள், மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும், உறவினர்கள் ஈ.வி.என். ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் உறவினர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனையின் முன்பு திரண்டு நின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்