சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்து: காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

அருப்புக்கோட்டை அருகே நிலை தடுமாறி சாலையோர இரும்பு தடுப்பில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-03-24 23:30 GMT
அருப்புக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயநகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 75). இவரது மனைவி பிரேமகுமாரி(70), மகன் கண்ணன்வேலு(52), மருமகள் பிந்து(45), பேத்தி வைஷ்ணவி ஆகியோருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். இவர்களுடன் உறவினர்கள் ஹேமந்த், அவினேஷ் ஆகியோரும் வந்தனர். கண்ணன்வேலு காரை ஓட்டினார்.

தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள இரும்பு தடுப்பில் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதனால் காரில் இருந்த கண்ணன்வேலு, பிந்து, கமலக்கண்ணன், பிரேமகுமாரி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காரில் வந்த கண்ணன்வேலுவின் மகள் வைஷ்ணவி பலத்த காயம் அடைந்தார். இவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

காரின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த உறவினர்கள் ஹேமந்த், அவினேஷ் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி கொண்டது. இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தீயணைப்பு மீட்பு குழு வரவழைக்கப்பட்டது.

இந்த குழுவினர் காரில் இருந்த 4 பேரின் உடல்களை மீட்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இதைதொடர்ந்து காரின் பாகங்களை வெல்டிங் மூலம் துண்டாக்கி சுமார் 3 மணி நேரம் போராடி உடல்கள் மீட்கப்பட்டன. விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்