ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவோர் மோசடி செய்வது அதிகரிப்பு வங்கி நிர்வாகத்தினர் பாராமுகம்

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக ஏ.டி.எம், மையங்களில் பணம் நிரப்பும் அலுவலர்கள் மோசடி செய்வது அதிகரித்து வரும் நிலையில் வங்கி நிர்வாகத்தினர் இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளனர்.

Update: 2019-03-24 22:30 GMT

விருதுநகர்,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இதற்கான ஊழியர்களை நியமித்து பணம் நிரப்பும் பணியை செய்துவருகின்றனர். ஆனால் இந்த பணம் நிரப்பும் பணி ஒப்பந்த நிறுவனத்தினாலோ அல்லது வங்கி அதிகாரிகளாலோ முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள் பணத்தை மோசடி செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளில் இவ்வாறு மோசடி செய்யும் நிலை தொடங்கியது. படிப்படியாக இந்த மோசடி அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஆண்டு விருதுநகரில் அரசு வங்கியின் இரண்டு ஏ.டி.எம். மையங்களில் ரூ.18 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் 22 ஏ.டி.எம். மையங்களில் ரூ.86¾ லட்சம் வரை மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக பணம் நிரப்பும் நிறுவனத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தாமதமாகவே போலீசில் புகார் செய்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலை தொடர்கிறது.

பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டதால் வங்கி நிர்வாகத்தினர் மோசடி நடைபெறாமல் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளனர். வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த மோசடி தொடர்பாக தெரிய வரும் போது ஏ.டி.எம். மையங்கள் மீது அவர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் பணம் நிரப்பிய ஏ.டி.எம். எந்திரங்களை சரிவர பூட்டாமல் சென்று விடுகின்றனர். பணம் நிரப்பும் பணியின் போது வங்கி அதிகாரிகள் முறையாக கண்காணித்தால் இம்மாதிரியான முறைகேடுகளை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும்.

பணம் நிரப்பும் போது மோசடி செய்யப்படும் பணத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனமே பொறுப்பு என்றாலும், வங்கி வாடிக்கையாளர் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளதால், தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகங்கள் இம்மாதிரியான மோசடி நடைபெறுவதை தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகங்களுக்கு மத்திய அரசும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யப்படாவிட்டால் இந்த மோசடிகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

மேலும் செய்திகள்