குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பக்தர் உள்பட 2 பேர் பலி

குளித்தலை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பக்தர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-24 22:15 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாத்திக்கவுண்டனூரில் உள்ள கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு இவ்வூரைச் சேர்ந்த பொதுமக்களுடன் இதே ஊரைச் சேர்ந்தவர்களான ராஜலிங்கம் மகன் தர்மராஜ் (வயது 17), பெரியசாமி மகன் கருப்பையா (19) ஆகிய இருவரும் தங்கள் ஊரில் இருந்து குளித்தலை நோக்கி நடந்து சென்றனர்.

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த போது, அதே சாலையில் இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த குளித்தலை அருகேயுள்ள இறும்பூதிபட்டியை சேர்ந்த முத்துவீரன் மகன் சதீஷ் (24) என்பவர் தர்மராஜ், கருப்பையா ஆகியோர் மீது மோதிவிட்டு முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டுவண்டியில் மோதியுள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருப்பையா மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சோகம்

மேலும் காயமடைந்த தர்மராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவிற்காக பால்குடம் எடுக்கச் சென்ற பக்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

மேலும் செய்திகள்