திருக்கோவிலூர் அருகே, உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட 110 கிலோ நாட்டு வெடிகள் பறிமுதல் - வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-03-24 23:00 GMT
திருக்கோவிலூர்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருக்கோவிலூர் பறக்கும்படை அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி, காரை சோதனையிட்டதில், 5 சாக்கு மூட்டைகளில் 110 கிலோ நாட்டு வெடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பறக்கும்படையினர் காரில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த மனோகர் மகன் மதன்ராஜ்(வயது 35) என்பதும், உரிய ஆவணம் இன்றி புதுச்சேரியில் இருந்து காரில் நாட்டு வெடிகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட நாட்டு வெடிகள் மற்றும் அதனை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட காரையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததோடு, மதன்ராஜையும் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பறக்கும்படை அலுவலர் ஜெயப்பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் நாட்டு வெடிகளை உரிய அனுமதியின்றி காரில் அனுப்பிய நாட்டுவெடி குடோன் உரிமையாளர் அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் சேகர் என்ற ஞானகிருஷ்ணன் என்பவர் உள்பட 2 பேர் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, மதன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்