வனப்பகுதியில் காட்டுத்தீ; மரங்கள் எரிந்து நாசம்

கடையம் அருகே கடனாநதி அணை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ ஏற்பட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

Update: 2019-03-24 21:45 GMT
கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கடனாநதி அணை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடனாநதி அணையின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையின்போது கடனாநதி அணையின் மேல்பகுதியில் உள்ள கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட இலுப்பையாறு பீட் வரையாட்டு மொட்டை பகுதியில் இடி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் புற்களில் தீப்பற்றி காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் இருந்த மரங்கள், புற்கள் தீப்பிடித்து ஏறிய தொடங்கின. இதுகுறித்து தகவல் அறித்த வனத்துறையினர் கடையம் வனசரகர் நெல்லை நாயகம் தலைமையில் வனவர் முருகசாமி, வன காப்பாளர்கள் சோமசுந்தரம், மணி, சுந்தரேசன், அய்யாத்துரை, வனகாவலர்கள் முத்து, ரமேஷ், சேகர், வேட்டை தடுப்பு காவலர்கள், தீ தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 55 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

காட்டுத்தீயை அணைக்கும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டுத்தீயை வனத்துறையினர் அணைத்தனர். இந்த காட்டுத்தீயில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.

மேலும் செய்திகள்