ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அமைச்சர் சமரசம்

ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சமரசம் செய்தார்.

Update: 2019-03-25 22:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள எல்.கருங்குளம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர்திட்டத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், கடந்த பல மாதங்களாக தண்ணீரே வருவதில்லை என்றும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதததால் நேற்று காலை இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மதுரை–ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரம் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வழியாக பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்த அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் காரை நிறுத்தி பொதுமக்களை சமரசம் செய்தார். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினர்.

அதனை கேட்ட அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திருவாடானை தொகுதிக்குட்பட்ட இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக கருணாஸ் உள்ளார். இருப்பினும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற தயாராக உள்ளேன் என்று தெரிவித்த அமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்