100 சதவீதம் வாக்களித்து குமரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் வாக்காளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

100 சதவீதம் வாக்களித்து குமரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-03-25 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கால்பந்து, கைப்பந்து போட்டி நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

போட்டியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

1952-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தலில் 45 சதவீதம் பெண்கள் மட்டுமே வாக்களித்தனர். கால போக்கில் பெண்களின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்தது. நமது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தட்டிக்கேட்பதற்கு பெண்களாகிய நீங்களே போராட வேண்டும். நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் உள்பட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தங்களது முன்னேற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். கன்னியாகுமரி மக்கள் 100 சதவீதம் வாக்களித்து மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்