மகனின் புற்றுநோயை குணப்படுத்துவதாக கூறி பெண்ணை கற்பழித்து பணம் பறித்த போலி சாமியார் கைது

மகனின் புற்றுநோயை குணப்படுத்துவதாக கூறி பெண்ணை கற்பழித்து பணம் பறித்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-03-25 22:30 GMT
மும்பை, 

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணின் மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இருந்தபோது, பெண்ணுக்கு போலி சாமியார் சைதன்யா சோனி (வயது41) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பூஜை செய்து மகனின் புற்று நோயை குணப்படுத்துவதாக பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய பெண் அவரை வீட்டுக்கு அழைத்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று போலி சாமியார் சைதன்யா சோனி பூஜை செய்வதற்காக பெண்ணின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகன் மட்டுமே இருந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட போலி சாமியார் பூஜை செய்வதாக கூறி மயக்க மருந்தை 2 பேருக்கும் கலந்து கொடுத்து உள்ளார். இதில் மயங்கிய பெண்ணை அவர் கற்பழித்தார்.

இதுபோல மற்றொரு நாள் அவர் பெண்ணை அந்தேரியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து தோஷம் கழிப்பதாக கூறி கற்பழித்து உள்ளார். மேலும் அவர் பூஜை செய்வதாக பெண் மற்றும் அவரது கணவரிடம் இருந்து ரூ.3½ லட்சம் வரை பறித்தார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் உயிரிழந்தார். அதன் பின்னரும் போலி சாமியார் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பணம்கேட்டு மிரட்டினார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், கணவருடன் சென்று செம்பூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கற்பழித்து பணம் பறித்துவிட்டு தலைமறைவாக இருந்த போலி சாமியாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்