திருச்சி மார்க்கெட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த மீன் வியாபாரி உள்பட 2 பேர் கைது

திருச்சி செங்குளம் காலனி மார்க்கெட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த மீன் வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-26 23:00 GMT
திருச்சி,

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே செங்குளம் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டின் வளாகத்தில் ஒரு அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் அருகே கஞ்சா செடி நட்டு வளர்க்கப்பட்டு வருவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கும், தனிப்படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நேற்று காலை செங்குளம் காலனி மார்க்கெட்டிற்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரச மரத்தின் அடிப்பகுதியில் ஒரு செடி தெர்மாகோல் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீசார் அகற்றி பார்த்தனர். அது கஞ்சா செடி என தெரியவந்தது. மேலும் அதனை அதே மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வரும் சுப்ரமணியபுரம் ஜெய்லானிய தெருவை சேர்ந்த சாகுல்அமீது (வயது 36), அதே மார்க்கெட்டில் கடையில் வேலை செய்து வரும் பாலக்கரை பகுதியை சேர்ந்த சக்திவேல் (32) ஆகியோர் வளர்த்து வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

கஞ்சா செடியை வளர்க்க அதற்கான விதையை அத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடம் இருந்து 2 பேரும் பெற்றிருக்க வேண்டும் என போலீசார் கருதினர். கஞ்சா செடியை எவ்வளவு நாட்களாக வளர்த்து வந்தனர்?, இதற்கு முன்பு கஞ்சா செடியை வளர்த்தது உண்டா? கஞ்சா விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனரா? என அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மார்க்கெட்டில் கழிப்பறை அருகே மற்றொரு இடத்தில் கஞ்சா செடி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 கஞ்சா செடிகளையும் போலீசார் பறித்து அப்புறப்படுத்தினர். மார்க்கெட்டில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்