வறட்சியால் வரத்து குறைந்தது, கூடலூர் வண்ணத்துபூச்சி பூங்கா களைஇழந்தது - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வறட்சி காரணமாக கூடலூரில் உள்ள பூங்காவுக்கு வண்ணத்து பூச்சிகளின் வரத்து குறைந்தது. பூங்கா களைஇழந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2019-03-26 22:45 GMT
கூடலூர்,

கேரளா- கர்நாடகா மாநில மக்களின் நுழைவு வாயிலாக திகழும் கூடலூர் பகுதியில் நீண்ட காலமாக சுற்றுலா திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. எனவே கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பூங்கா அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியது. பின்னர் கூடலூர் அருகே பொன்னூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் 25 சென்ட் நிலத்தில் வண்ணத்து பூச்சி பூங்கா திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக பாலிதீன் கொண்டு மூடப்பட்ட 2 குடில்கள் அமைக்கப்பட்டன.

மேலும் வண்ணத்து பூச்சிகளுக்கு விருப்பமான ஜனியா, சூரியகாந்தி, அஜிரேட்டம், வெர்பினா, சப்னேரியா குரோட்டேரியா, மொட்டு ரோஜா, சால்வியா உள்பட பலரக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. வண்ணத்து பூச்சிகள் உள்ள குடில்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், வண்ணத்து பூச்சிகளுக்கு தேவையான காலநிலை நிலவுகின்ற வகையில் 2 செயற்கை நீரூற்றுகள் மற்றும் புல்வெளி தளங்கள் அமைக்கப்பட்டன.

தொடக்க காலத்தில் வண்ணத்து பூச்சிகள் வரத்து சரிவர இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கூடலூர் பகுதி மக்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை மற்றும் பராமரிப்பு காரணமாக நாளடைவில் வண்ணத்து பூச்சிகள் வர தொடங்கின. இதன்காரணமாக சுற்றுலா பயணிகளும் அதிகளவு வந்து சென்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைந்து காணப்படுகிறது.

கோடை வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே அரசு தோட்டக்கலை துறை வண்ணத்து பூச்சி பூங்காவிலும் வறட்சியால் வண்ணத்து பூச்சிகள் வரத்து அடியோடு குறைந்து களை இழந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

இது குறித்து தோட்டக்கலை பண்ணை நிர்வாகத்தினர் கூறியதாவது:-

வறட்சியின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வண்ணத்து பூச்சிகள் வரத்து இல்லை. வருகிற ஜூன் மாதம் மழை பெய்ய தொடங்கினால் வண்ணத்து பூச்சிகள் வரத்து அதிகரித்து சீசன் களைகட்டும்.

மேலும் வண்ணத்து பூச்சிகள் நிரந்தரமாக பூங்காவில் இருக்க சில வகை தாவரங்கள் கூடுதலாக நடவு செய்து உள்ளோம். இதேபோல் கேரளாவிலும் வண்ணத்து பூச்சி பூங்காவில் சீசன் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்