வாணியம்பாடியில் பரபரப்பு, அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கட்டிட மேஸ்திரிக்கு சரமாரி வெட்டு

பெற்றோரை தாக்கிய கட்டிட மேஸ்திரியை மருத்துவமனைக்குள் புகுந்து வெட்டிய வாலிபர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்யக்கோரி கட்டிட மேஸ்திரியின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-03-26 22:30 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 47). இவர் தனது வீட்டில் கழிப்பறை கட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி வேலு என்பவரை கடந்த 3 தினங்களுக்கு முன்பு அணுகினார். அவர் தற்போது முடியாது என கூறிவிட்டார்.

இதனையடுத்து அதே ஊரில் உள்ள கட்டிட மேஸ்திரி முருகனிடம் (54) கேட்டுள்ளார். அதற்கு முருகன், உடல்நலக்குறைவு உள்ளதால் தன்னால் பணியில் ஈடுபட முடியாது என கூறியுள்ளார். ஆனால் அவர் நேற்று முன்தினம் கொடிக்கம்பத்திற்கு பீடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதனை பார்த்த தீர்த்தகிரி, அவரிடம் உடல்நலக்குறைவால் வரமுடியாது என கூறிவிட்டு இப்போது கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபடுகிறாயே என கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.

இந்த விஷயம் முருகனின் மகன் கமலநாதனுக்கு (26) தெரியவரவே அவர் தனது தந்தையுடன் தீர்த்தகிரி வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்கள் தீர்த்தகிரியிடம் அது குறித்து கேட்கவே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீர்த்தகிரிக்கு ஆதரவாக அவரது மனைவி மஞ்சுளாவும் (44)பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இதில் தீர்த்தகிரி, அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அதேபோல் முருகனும் காயம் அடைந்தார். அனைவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மஞ்சுளா மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது பெற்றோரை தாக்கிய முருகன் மீது தீர்த்தகிரியின் மகன் மோகனுக்கு (24) ஆத்திரம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பர்களை அழைத்துக்கொண்டு மோகன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தந்தையிடம் நலம் விசாரிப்பதுபோல் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியுடன் அதே வார்டில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த முருகனின் அருகில் சென்று அவரை சரமாரியாக வெட்டினார். இதில் முருகனுக்கு 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அலறவே மோகன் அங்கிருந்து வெளியில் ஓடி வந்து நண்பர்களுடன் தப்பி ஓடிவிட்டார்.

மோகனையும் அவருடன் தப்பியவர்களையும் கைது செய்யக்கோரி முருகனின் உறவினர்கள் நேற்று காலை 8 மணியளவில் வெள்ளக்குட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தப்பி ஓடிய மோகனையும் அவருடன் வந்தவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்று காலை 10.30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனிடையே ஏற்கனவே தீர்த்தகிரி மற்றும் அவரது மனைவி மஞ்சுளா தாக்கப்பட்டது தொடர்பான புகாரின்பேரில் முருகனின் மகன் கமலநாதனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். மருத்துவமனைக்குள் புகுந்து முருகனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மோகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்