‘மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்’ வேலூரில் வைகோ பேச்சு

‘மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோ பேசினார்.

Update: 2019-03-26 23:32 GMT
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் மண்டி தெருவில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோ கலந்து கொண்டு டி.எம்.கதிர்ஆனந்தை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சுதந்திர இந்தியாவின் முக்கிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எதிர்கால இந்தியா என்ன ஆகும், ஜனநாயகமாக இருக்குமா? ரத்தக்கறைகள் கொண்ட பாசிச அதிகாரமாக மாறுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் ஆற்றல் மிகுந்தவர். ஆங்கில புலமை கொண்டவர்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, கோட்சே வாழ்க என முழக்கமிட்டனர். இது மோடிக்கு கேட்கவில்லை? அவருக்கு இதயம் இல்லையா? இரக்கம் இல்லையா?. இந்துத்துவா மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நிறைவேற்றும் மோடி அரசு பாசிச அரசாகும். 5 ஆண்டுகாலத்தில் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தியாவில் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் தான் 6.5 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. அதை தட்டிக் கேட்காமல் கைகட்டி தமிழக அரசு உள்ளது. தமிழகத்தை தாரைவார்க்கும் அ.தி.மு.க. அரசையும் தூக்கி எறிய வேண்டும். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் வெற்றி சின்னமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்