தேவகோட்டையில் வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

தேவகோட்டையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-27 23:15 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் சேவுகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஜெயராமனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயராமன், அவரது மகன் பிரகாஷ் உள்பட சிலர் சேர்ந்து சேவுகனை தாக்கினர். இதுகுறித்து தேவகோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 10 பேர் சேர்ந்து, நடராஜபுரம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சேவுகனின் உறவினரான பிரபு (வயது 28) என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து இந்த கும்பலை பிடிப்பதற்காக உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய தேவகோட்டை நடராஜபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன், அவரது மகன் பிரவீன், மனைவி பிரேமா, கரியக்கோட்டை பகுதியை சேர்ந்த முருகானந்தம், நடராஜபுரத்தை சேர்ந்த பாபு, செந்தில், அருணகிரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், முத்துச்சாமி ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயராமனின் மற்றொரு மகன் பிரகாஷ் மற்றும் முத்துக்குமார் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயராமன் மற்றும் அவரது மனைவி பிரேமா, மகன்கள் பிரவீன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்று காலை ஆதி தமிழர் கட்சியினர், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி பிரபு உடல் வைக்கப்பட்டு இருந்த தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய அவர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உமாதேவன், மாநில செயலாளர் இறகுசேரி முருகன், நகர செயலாளர் கமலகண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்