ஒகேனக்கல்லில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

ஒகேனக்கல்லில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2019-03-27 23:00 GMT
பென்னாகரம், 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாளப்பள்ளம், பி.அக்ரஹாரம், மாங்கரை, ஒகேனக்கல், கூத்தப்பாடி, சின்னம்பள்ளி, எர்ரப்பட்டி உள்பட 22 கிராமங்களில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.

இந்த கூட்டங்களுக்கு அ.தி.மு.க. விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வேலுமணி முன்னிலை வகித்தார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இந்த பிரசார கூட்டங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் ஆட்சியில் அமர தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வலிமையான இந்தியாவை உருவாக்க எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த கூட்டணிதான் வெற்றி பெறும் என்று மக்கள் இப்போதே கூறத்தொடங்கி விட்டனர். பிரசார கூட்டங்களில் பேசும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்.

அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை நாங்கள் நிச்சம் நிறைவேற்றுவோம். தர்மபுரி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வரும் ஒகேனக்கல்லை உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற தமிழக அரசின் உறுதுணையுடன் நடவடிக்கை எடுப்பேன். ஒகேனக்கல்லில் வாழும் மசாஜ் தொழிலாளர்கள், மீனவர்கள், உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். பரிசல் ஓட்டிகளுக்கு உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

மேலும் செய்திகள்