இயற்கை உரம் தயாரிப்பு மையம் கட்ட எதிர்ப்பு: சேலத்தில் பொதுமக்கள் சாலைமறியல்

சேலத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-27 22:00 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சி சார்பில் 20 இடங்களில் சுமார் ரூ.18 கோடி மதிப்பில் குப்பைக்கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அம்மாபேட்டை பச்சப்பட்டி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள அம்மாபேட்டை மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், இந்த உரம் தயாரிக்கும் மையம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தையொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்த மையம் கட்டப்பட்டால் சுவாசகோளாறு பிரச்சினை, காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாக எங்களுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே உரம் தயாரிக்கும் மையத்தை கட்ட தடை விதிக்க வேண்டும் என்றனர்.

இதைக்கேட்ட அதிகாரிகள், இந்த மையம் பாதுகாப்பான முறையில் கட்டப்படுகிறது எனவும், உங்கள் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக இயற்கை உரம் தயாரிக்கும் மையம் கட்டும் பணி நிறுத்தப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்