வேலூரில் ரவுடி கொலை: 2 பேர் கோர்ட்டில் சரண்

வேலூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர், குடியாத்தம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

Update: 2019-03-28 23:00 GMT
வேலூர், 

வேலூர் சேண்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யா என்ற சத்யராஜ் (வயது 35). இவர் மீது வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் வேலூர் வடக்கு, தெற்கு, சத்துவாச்சாரி போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

வேலூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளியான சத்யா ரவுடியாக வலம் வந்துள்ளார். நேற்று முன்தினம் சேண்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் திருமால் (வேலூர் வடக்கு), நந்தகுமார் (பாகாயம்) ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சேண்பாக்கம் பாப்பாராஜா கோவில் தெருவை சேர்ந்த சிவமணி (29) என்பவர் நேற்று வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் மாஜிஸ்திரேட்டு வெற்றிமணி முன்னிலையில் சரண் அடைந்தார்.

இதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய சேண்பாக்கம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சிவசெல்வம் (30) என்பவர் குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சந்திரகாசபூபதி முன்னிலையில் சரண் அடைந்தார். சரண் அடைந்த இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

கொலைக்கான காரணம் குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை செய்ய வடக்கு போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்