சித்தப்பா கொலை: கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு

சித்தப்பாவை கொலை செய்த வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

Update: 2019-03-28 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் கடகத்தூரை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). கட்டிட மேஸ்திரி.

மேல் மாட்டுக்கானூரை சேர்ந்தவர் சின்னசாமி (54). இவர் அரவிந்தின் சித்தப்பா. இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி அரவிந்த் மற்றும் சின்னசாமி ஆகியோர் சவுளூர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பைபாஸ் சாலை மேம்பாலம் அருகே 2 பேரும் வந்தனர். அப்போது திடீரென அரவிந்த் தனது கையில் வைத்திருந்த பாட்டிலால் சின்னசாமியை தாக்கினார். இதில் தலை, கை, கால் பகுதிகளில் படுகாயமடைந்த சின்னசாமி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அரவிந்த் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் அரவிந்த் மீதான கொலை குற்றம் உறுதியானது. இதையடுத்து அரவிந்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் நேற்று தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்