குடிநீர் கிணற்றை சுத்தப்படுத்தக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

குடிநீர் கிணற்றை சுத்தப்படுத்தக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-28 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலுத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது:- எங்கள் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடுமங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் ஊரின் மைய பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள குடிநீர் கிணற்றை சுத்தம் செய்து தரக்கோரி எலந்தலப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு எங்கள் பகுதியில் தலை விரித்தாடுகிறது.

மேலும் ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியை கண்டுகொள்வதில்லை. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. எங்களது தெருவில் நிறைய அடிப்படை பிரச்சினைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இது குறித்து ஊராட்சி செயலாளர் தமிழரசுவிடம் முறையீட்டால், அவர் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆனால் அந்த நேரத்தில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்ததால், பொதுமக்களின் தர்ணா போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் அந்தப்பகுதி மக்கள் முறையிட்டனர். மேலும் ஊராட்சி செயலாளர் தமிழரசுவை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆவேசத்துடன் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து தர்ணாவை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்