மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.4¾ கோடி பறிமுதல் கலெக்டர் ரோகிணி தகவல்

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.4 கோடியே 73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ரோகிணி கூறியுள்ளார்.

Update: 2019-03-28 22:30 GMT
சேலம், 

சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 கோடியே 73 லட்சத்து 73 ஆயிரத்து 649 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.1 கோடியே 63 லட்சத்து 58 ஆயிரத்து 65 மதிப்பில் தங்கம், வெள்ளி, புடவைகள் உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.3 கோடியே 67 லட்சத்து 15 ஆயிரத்து 934 மற்றும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து ,500 மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையொட்டி உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்கள் தேர்தல் குறித்த தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 என்ற எண்ணிற்கு இதுவரை 5,415 அழைப்புகளும், 18004257020, 18004251984 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு இதுவரை 20 அழைப்புகளும் வந்து உள்ளன. 262 பேர் சமூக விரோதிகளாக கண்டறியப்பட்டு அவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல்கள் குறித்து 79 புகார்கள் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பிரசார அனுமதி 78 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்