பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தாய்-மகன் உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தாய்- மகன் உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-03-28 22:15 GMT
திருச்சி,

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அம்சவள்ளி(வயது 48). இவருடைய மகன் செந்தில்குமார்(27), மாமியார் ராஜம்(61). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி குடும்பத்தினருக்கும் இடையே ஒரு காலிமனையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

கடந்த 14-1-2015 அன்று கந்தசாமி குடும்பத்தினர் பிரச்சினைக்குரிய இடத்தில் கல்லுக்கால் ஊன்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அம்சவள்ளி குடும்பத்தினர் கல்லுக்கால்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக கந்தசாமி குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் அம்சவள்ளி, செந்தில்குமார், ராஜம் ஆகிய 3 பேரையும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக கைது செய்து திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி எஸ்.குமரகுரு விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அம்சவள்ளி உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்