பழனியில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கேரள வியாபாரி

பழனியில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கேரள வியாபாரியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-03-29 22:38 GMT
பழனி, 

சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சுமார் 8.30 மணி அளவில் பழனியில் இருந்து புறப்பட்டு சென்றது. பழனியை அடுத்த பெரியாவுடையார் கோவில் அருகே சென்றபோது, திடீரென ஒருவர் தண்டவாளத்தின் குறுக்கே பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதை கவனித்த என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார்.

இதற்கிடையே அந்த பகுதியில் நின்றவர்கள் தண்டவாளத்தை விட்டு வரும்படி அவரை அழைத்தனர். ஆனால் அவர்கள் மீது அந்த நபர் கற்களை வீசினார். ஆனால் நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து அந்த நபரை பிடித்து போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள பல்லநாடு பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 41) என்பதும், மிளகு, காபி கொட்டை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், விபின்குமார் (19) என்ற மகனும், லிவிதா என்ற மகளும் உள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும் குடும்ப பிரச்சினையில் தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது. கேரள வியாபாரியின் இந்த தற்கொலை முயற்சியால் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமின்றி பாலக் காடு- திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயிலும் 15 நிமிடம் தாமதமாக பழனிக்கு வந்து, புறப்பட்டு சென்றன.

மேலும் செய்திகள்