திருச்சி விமான நிலையத்தில் மேலும் ஒருவரிடம் ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மேலும் ஒரு பயணியிடம் ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-30 23:00 GMT
செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம், மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்க மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்து, கடத்தி வரப்படும் பொருட்களை பறிமுதல் செய்வார்கள்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.


அப்போது பெரம்பலூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது உடமையை பரிசோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 6,265 யூரோவும் 2,579 மலேசியன் ரிங்கிட் 430 சிங்கப்பூர் டாலர், 2,000 ரியால், 2,760 கிராம் திராம்ஸ் என்று மொத்தம் ரூ.6½ லட்சம் மதிப்பில் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பெரியசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருவாரூரை சேர்ந்த பயணியிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் ஒருவரிடம் ரூ.6½ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்