திருவாரூர் ஆழித்தேரோட்ட விழாவில் உணவு பொருட்களை வினியோகிக்க உரிய அனுமதி பெற வேண்டும்

திருவாரூர் ஆழித் தேரோட்ட விழாவில் உணவு பொருட்களை வினியோகிக்க உரிய அனுமதி பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-30 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் அன்னதானம், மோர் மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்க உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி பெற வேண்டும். அதற்கு “ foodlicensing.fssai.gov.in ” என்ற அரசு இணைய தளத்தில் படிவம் ஏ-யில் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அலுவலர்கள் ஆய்வு செய்ய ஏதுவாக உணவு பொருள் தயார் செய்யும் இடம், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

பொதுமக்களை ஒரே இடத்தில் அமர வைத்து உணவு பொருட்கள் வீணாகாமல் வினியோகம் செய்ய வேண்டும். குளிர்பானங்கள் மற்றும் மோர் குளிர்விக்க பயன் படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் சுத்திரிக்கப்பட்ட குடிநீரில் மட்டுமே தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். உணவு பொருள் வியாபாரிகள் உரிமம் இல்லாமல் எந்த உணவு பொருட்களும் விற்பனை செய்ய கூடாது. செயற்கை வண்ணம் இல்லாத உணவு பொருட்கள் தயாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களான பாலிதீன் பைகள், உறிஞ்சி குழல்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவைகளை பயன்படுத்த கூடாது. மீறி பயன் படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மடப்புரம் பழைய மருத்துவமனை கட்டிடத்தில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்