கன்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவன் பலி

திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவன் பலியானான்.

Update: 2019-03-30 23:00 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பூங்காவனம்புரம் தெருவை சேர்ந்தவர் பூபாலன் கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 12). அதே பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக எண்ணூர் விரைவு சாலை ஒண்டிகுப்பம் அருகே நடந்து சென்றான். அப்போது எண்ணூரில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

கண்இமைக்கும் நேரத்தில் மாணவன் கார்த்திகேயன் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

மாணவன் கார்த்திகேயன் இறந்த செய்தி அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். போக்குவரத்து போலீசார் கன்டெய்னர் லாரி போக்குவரத்தை முறைப்படுத்துவது இல்லை என்றும், இதுவே மாணவன் உயிரிழப்புக்கு காரணம் என்றும் கண்டனம் தெரிவித்து, கன்டெய்னர் லாரி மீது கல் வீசினர்.

இதில் லாரி கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்