கூடலூர் அருகே, தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் - சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்

கூடலூர் அருகே தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை போலீசில் புகார் செய்து உள்ளார்.

Update: 2019-03-31 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் தாலுகா நாடுகாணியை சேர்ந்தவர் சத்தியசீலன். இவருக்கும், பாண்டியாறு குடோன் பகுதியை சேர்ந்த சுகந்திக்கும்(வயது 24) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் நாடுகாணியில் சுகந்தி வசித்து வந்தார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சுகந்தி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறு காரணமாக சுகந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

இதற்கிடையே சுகந்தியின் தந்தை செல்லதுரை தேவாலா போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். இதையொட்டி தேவாலா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அப்போது பெண்ணின் உறவினர்கள் அவரிடம் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுகந்தி சாவில் சந்தேகம் உள்ளதால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்வதற்கான பணிகளையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மேற்கொண்டது.

இதனிடையே சந்தேகத்தின் பேரில் பெண் இறந்துள்ளதால் உடலை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் சுகந்தியின் உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கூடலூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் புகழேந்தியிடம் கேட்ட போது, உடற்கூராய்வு நிபுணர்கள் நீலகிரியில் கிடையாது. மேலும் இறந்த பெண்ணின் சாவில் சந்தேகம் எழுந்துள்ளதால் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடற்கூராய்வு நிபுணர்கள் பரிசோதித்து முழு அறிக்கையும் வழங்குவார்கள் என்றார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைத்த பின்னரே மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்