தேனி அருகே, கள்ளநோட்டை மாற்ற முயன்ற முதியவர் சிக்கினார் - ரூ.42 ஆயிரத்து 800 பறிமுதல்

தேனி அருகே கள்ளநோட்டை மாற்ற முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.42 ஆயிரத்து 800 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-31 22:15 GMT
தேனி,

தேனி மாவட்டம், பழனிசெட்டியபட்டியில் உள்ள ஒரு கடைக்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று வந்தார். கடையில் பொருட்களை வாங்கிவிட்டு ரூ.200 நோட்டை கொடுத்தார். அந்த ரூபாய் கள்ளநோட்டு என்று கடைக்காரர் அந்த நோட்டை முதியவரிடம் திருப்பி கொடுத்தார். அவரிடம் மேலும் சில 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கடைக்காரர் பார்த்தார். உடனே அந்த முதியவர் அங்கு இருந்து சென்று விட்டார். இதுகுறித்து பழனிசெட்டியபட்டி போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பழனிசெட்டியபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்ற முதியவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், கடமலைக்குண்டுவை சேர்ந்த மகாராஜன் (வயது 65) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் 200 ரூபாய் நோட்டுகள் 204-ம், 500 ரூபாய் நோட்டுகள் 4-ம் என மொத்தம் ரூ.42 ஆயிரத்து 800 இருந்தது. அந்த நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகளாகும். உடனே அந்த கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கள்ளநோட்டுகளை மதுரையை சேர்ந்த ஒருவர் கொடுத்துள்ளார். அந்த கள்ளநோட்டுகளை மாற்றி தந்தால் கமிஷன் தருவதாகவும், மகாராஜனின் செல்போனுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து அந்த நபர் தொடர்பு கொண்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருடைய செல்போனை கைப்பற்றி அதில் உள்ள செல்போன் எண்களை வைத்து கள்ளநோட்டுகளை மாற்ற கொடுத்த நபரின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். பிடிபட்ட மகாராஜன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனியில் ஒரு வியாபாரியிடம் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்