தேர்தல் அதிகாரிகள் தாக்கியதாக சுயேச்சை வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி - கடலூரில் பரபரப்பு

புதுவை தேர்தல் அதிகாரிகள் தாக்கியதாக சுயேச்சை வேட்பாளர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2019-03-31 22:45 GMT
கடலூர், 

கடலூர் கோண்டூர் மலையப்பநகரை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது 55). இவர் பாரதீய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். யாதவ சமுதாயத்தை பாரதீய ஜனதா புறக்கணித்து விட்டதாக கூறி, அவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் நேற்று முன்தினம் தனது மகன் சதீஷ்குமார் உள்ளிட்ட 4 பேருடன் புதுச்சேரியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ரூ.10 ஆயிரத்துக்கு 200 துண்டுகள் வாங்கிக்கொண்டு காரில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் இரவு 9.30 மணி அளவில் புதுச்சேரி எல்லையான முள்ளோடை என்ற இடத்தில் வந்த போது, அங்கிருந்த புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் அவர்கள் வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் துண்டு இருந்தது.

இதை பார்த்த தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தாமரைக்கண்ணன் தான் ஒரு வேட்பாளர் என்றும், மக்களை சந்திப்பதற்காக துண்டுகளை வாங்கி செல்வதாகவும், அதற்கான ரசீது உள்ளதாகவும் கூறி, அதை காண்பித்தார்.

இருப்பினும் தேர்தல் அதிகாரிகள் அவரை விடவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களும் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அவர் தனது கார் முன்பு அமர்ந்தார். அவரை போலீசார் தர, தரவென இழுத்து தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் அதிகாலையில் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று காலை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றி செந்தாமரைக்கண்ணன் கூறுகையில், ஒரு வேட்பாளர் என்று கூறியும், அதற்கான படிவத்தை காண்பித்தும் என்னை புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள், போலீசார் அவமானப்படுத்தி விட்டனர். கிருமாம்பாக்கம் போலீசார் என்னை தாக்கி, நடுரோட்டில் இழுத்தனர். குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால் தான் தேர்தல் அதிகாரி என் மீது கடுமையாக நடந்து கொண்டார்.

இது பற்றி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். அவர் புதுச்சேரி கவர்னரிடம் புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி புதுச்சேரி கவர்னரிடம் இது பற்றி புகார் அளிக்க இருக்கிறோம். குக்கர் சின்னத்தில் நான் போட்டியிடுவதால் எனக்கு மிரட்டல்கள் வருகிறது. ஆகவே உரிய பாதுகாப்பு கேட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் அளிக்க இருக்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்