வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி மீது பஸ் மோதல் இரும்பு கம்பிகள் பஸ்சுக்குள் புகுந்ததில் 24 பயணிகள் படுகாயம்

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி மீது பஸ் மோதியது. இதில் இரும்புக்கம்பிகள் பஸ்சுக்குள் புகுந்ததில் 24 பயணிகள் இரும்பு கம்பி குத்தி படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-04-01 23:15 GMT
தாம்பரம்,

தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 பயணிகளுடன் அரசு பஸ் சென்னை நோக்கி நேற்று அதிகாலை வந் தது. பஸ் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வந்தபோது, அந்தப் பகுதியில் சென்னை நோக்கி ராட்சத இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிரைலர் லாரியின் பின்பக்கத்தில் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில், இரும்பு கம்பி குத்தி அரசு பஸ் டிரைவர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 24 பயணிகள் படுகாயமடைந்தனர். இதனைப்பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளையும், பஸ் டிரைவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது. மற்ற பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்