முக்கடல் அறிவியல் பூங்காவை காண கட்டணம் நிர்ணயம்

முக்கடல் அறிவியல் பூங்காவை காண மாநகராட்சி திடீரென்று கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

Update: 2019-04-03 22:45 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை உள்ளது. இந்த அணை நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணையின் முன் பகுதியில் காலியாக இருந்த இடத்தில்,  நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.42.32 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அறிவியல் பூங்காவும், யோகா மையம் ஆகியவை ரூ. 96.21 லட்சத்தில் அமைத்து உள்ளனர்.

இந்த பூங்காக்கள் கடந்த ஜனவரி மாதம் 1–ந்தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் அணைக்கு வந்து பார்த்து விட்டு, பின்னர் பூங்கா, அறிவியல் பூங்காவையும் பார்த்து ரசித்து விட்டு சென்றார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்க்க எந்த கட்டணமும் இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி நேற்று முன்தினத்தில் இருந்து அறிவியல் பூங்காவை காண பெரியவர்களுக்கு ரூ.5–ம், சிறியவர்களுக்கு ரூ.2–ம் கட்டணமாக நிர்ணயம் செய்தது.

ஆனால் பள்ளி–கல்லூரியில் இருந்து சுற்றுலாவாக வரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. இந்த கட்டண நிர்ணயத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் பூங்காவையொட்டி டீக்கடை போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்