முதல்-அமைச்சரை வரவேற்று கட்சி கொடிகள் அமைக்க எதிர்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்- எச்.வசந்தகுமார் ஆதரவாளர்கள் மோதல்

முதல்-அமைச்சரை வரவேற்று கட்சி கொடிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக எச்.வசந்தகுமார், பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இந்த திடீர் மோதலால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-03 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் அ.தி.மு.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சி கொடிகளும் பறந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேற்று பகலில் வடசேரி சந்திப்பில் பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. இதற்கு எச்.வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது வேட்பாளர் எச்.வசந்தகுமாருடன், திறந்த ஜீப்பில் நின்றவாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசினார். அதாவது, தேர்தல் நடத்தை விதிப்படி கட்சி கொடிகள் அமைக்க கூடாது என்று கூறி குமரிக்கு ராகுல் காந்தி வருகையின்போது கட்சி கொடிகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை. எனவே இங்கு கட்டப்பட்டுள்ள கொடிகளை உடனே அகற்ற வேண்டும், இல்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

இதைதொடர்ந்து நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயத்தில் புத்தேரியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வடசேரி சந்திப்புக்கு வந்தனர். எதிரெதிர் அணியினர் ஒரே இடத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அதேபோல் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் எதிர்எதிரே நின்று கொண்டு போட்டி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தும் சமரசம் ஏற்படவில்லை. திடீரென பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களுக்கும், எச்.வசந்தகுமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்தார். மேலும் அதிரடிப்படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த திடீர் பிரச்சினையால், வடசேரி சந்திப்பு வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை வடசேரி சந்திப்பில் இணையும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. நிலைமை விபரீதமாவதை அறிந்த மந்திரி மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கினார். பின்னர், தன்னை எதிர்த்து போட்டியிடும் எச்.வசந்தகுமாரை நோக்கி சென்று அவரிடம் கை கொடுத்து பேசினார். மேலும், நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்றும், இதுதொடர்பாக நான் பேசிக்கொள்கிறேன் என்றும் கூறினார். இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் அங்கிருந்து புறப்பட்டனர். எனினும் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.

அதன் பிறகு அண்ணா சிலை அருகே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. நம்மை சீண்டி பார்ப்பார்கள். ஆனால் நமது குறிக்கோள் வெற்றி மட்டும் தான்“ என்றார்.

தொடர்ந்து அனைவரும் வேறு இடத்துக்கு பிரசாரம் செய்ய புறப்பட்டனர். அதன்பிறகு அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. போக்குவரத்தையும் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

மேலும் செய்திகள்