அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது நர்ஸ் பாலியல் புகார் 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

மன்னார்குடியில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது நர்ஸ் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் தொடர்பாக டாக்டர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-04-03 22:15 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் மணவழகன்(வயது 52). இவர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவராகவும், திருவாரூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.

இவர் மன்னார்குடி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய நர்ஸ் ஒருவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், செல்போனில் அடிக்கடி பாலியல் ரீதியாக உணர்வை தூண்டும் வகையில் பேசியதாகவும் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நர்ஸ், திருவாரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் முன்னிலையில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட நர்ஸ் அளித்த புகாரில், தான் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நர்சாக பணியில் சேர்ந்ததாகவும், பணியில் சேர்ந்தது முதல் அவ்வப்போது இரட்டை அர்த்தத்திலும், பாலியியல் உணர்வை தூண்டும் வகையிலும் டாக்டர் மணவழகன் தன்னிடம் பேசியதாகவும் இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேலை சந்தித்து புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் டாக்டர்கள் ராகவி, புவனேஸ்வரி, மல்லிகா ஆகியோரை கொண்ட விசாகா கமிட்டியினர் துறை ரீதியான விசாரணையை தொடங்கி மருத்துவர் மணவழகனை நேரில் அழைத்து நர்ஸ் புகார் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் மன்னார்குடியில் பணியாற்றிய டாக்டர் மணவழகன், தலையாமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் மற்றும் 3 கார்களில் வந்த பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஆகியோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் டாக்டர் மணவழகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில், அரசு டாக்டர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறித்த தகவல் அறிந்து மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நிர்வாகிகள், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேலை சந்தித்து ஆதாரம் இல்லாமல் இதுபோன்று புகார் கொடுக்க கூடாது என முறையிட்டனர்.

அதற்கு டாக்டர்.ஸ்டான்லி மைக்கேல், நாங்கள் புகார் அளித்துள்ளோம். புகாரை போலீசார் விசாரணை செய்கிறார்கள். இது குறித்து இனிமேல் போலீசார் தான் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

இது குறித்து டாக்டர் மணவழகன் தரப்பில் கூறிய தாவது:-

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவராக இருக்கும் டாக்டர் மணவழகன் கடந்த மாதத்தில் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் நடந்த டாக்டர்கள் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். அப்போது இணை இயக்குனராக பதவியேற்ற ஸ்டான்லி மைக்கேலுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்படும் பணத்தில் முறைகேடு செய்வதாக ஸ்டான்லி மைக்கேல் மீது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அப்போது சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்கள் குழுவை அழைத்து சென்ற டாக்டர் மணவழகன், இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் மீது புகார் மனு அளித்திருந்தார். இதனால் மணவழகன் மீது ஏற்பட்ட கோபத்தில் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் நர்ஸ் ஒருவரை பயன்படுத்தி இந்த புகாரை ஸ்டான்லி மைக்கேல் அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

அரசு டாக்டர் மீது நர்ஸ் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்