மதுரையில் வேனில் கொண்டு சென்ற 47 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

மதுரையில் வேனில் கொண்டு சென்ற 47 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-03 23:15 GMT

மதுரை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வண்ணம் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே நடந்த வாகன சோதனையின் போது பறக்கும் படை அதிகாரிகள் நகைகள், பணத்தை பெருமளவில் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், வேனுக்குள் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருந்தன. உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து எடை போட்டு பார்த்தனர். அதில் 47 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அதிகாரிகள் வேனில் இருந்தவர்களிடம் விசாரித்த போது மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு தங்கம் கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் வேனுடன் தங்கத்தை பறிமுதல் செய்து மதுரை வடக்கு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் 47 கிலோ தங்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்