விழுப்புரம் அருகே, விவசாயி மர்ம சாவு - கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி குடும்பத்தினர் மனு

விழுப்புரம் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி அவரது குடும்பத்தினர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-04-03 22:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 48), விவசாயி. கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் அதே கிராமத்தில் உள்ள ஏரியில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் மின்சாரம் தாக்கி வீரப்பன் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வீரப்பனின் மனைவி காளியம்மாள், மகள் புவனேஸ்வரி, வீரப்பனின் தம்பி நாகப்பன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வீரப்பனை ராமானுஜபுரத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக்கொலை செய்துவிட்டு பிணத்தை ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்ய வேண்டும். மேலும் வீரப்பனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்