திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 11 பேர் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 11 பேர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2019-04-03 22:15 GMT
திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய, தண்டனை பெற்ற இலங்கை தமிழர்கள், வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர்களான தயானந்தன், ராபின் பிரசாத், சாந்தரூபன், சத்தியசீலன், தயாகரன், கோபிநாத், குருவிந்தன், சுதர்சன், பிரபாகரன், ரமேஷ், தர்சன் ஆகிய 11 பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்பும் அவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் 11 பேரும் தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரியும், தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரியும் நேற்று காலை 10.30 மணி முதல் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தொடர் உண்ணாவிரதம்

இலங்கை தமிழர்களின் உண்ணாவிரதம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முகாம் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்