ராசிபுரம் அருகே பரபரப்பு அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சேலம் ரவுடி கைது மேலும் 4 பேர் சிக்கினர்

ராசிபுரம் அருகே அரிவாளால் கேக் வெட்டி சேலம் ரவுடி ஒருவன் தனது கூட்டாளிகளுடன் பிறந்த நாள் கொண்டாடினான். இதுதொடர்பாக ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-04 23:00 GMT
சேலம்,

சென்னையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரபல ரவுடி பினு என்பவன், அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சக ரவுடிகளுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடி பினு தப்பி ஓடிவிட்டான்.

அங்கிருந்த சில ரவுடிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஒரு இடத்தில் பதுங்கி இருந்த ரவுடி பினுவை போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரவுடி பினுவை மாதிரி, சேலத்தை சேர்ந்த ரவுடி ஒருவன், அரிவாளால் கேக் வெட்டி சக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி விவரம் வருமாறு:-

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி சூரியின் மகன் ஜீசஸ்(வயது 32). இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி உள்ளன. ரவுடியான ஜீசஸ் தனது பிறந்தநாளை சக ரவுடிகளுடன் உற்சாகமாக கொண்டாட முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு மலைப்பகுதிக்கு சென்றனர். அங்கு மேலும் சில ரவுடிகளும் வந்தனர். அப்போது, ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கேக்கை சுமார் 2 அடி நீளமுள்ள அரிவாளால் வெட்டி ஜீசஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தான்.

அப்போது, அருகில் இருந்த மற்ற ரவுடிகள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியதோடு ஆடி, பாடி மகிழ்ந்தனர். பதிலுக்கு அவனும் கேக் சாப்பிட்டபடி கையில் அரிவாளுடன் ஆட்டம் போட்டுள்ளான். பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி தனது கை, கழுத்தில் ஏராளமான தங்க நகைகளை அணிந்திருந்தான்.

சேலம் ரவுடி ஜீசஸ் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஜீசஸ் மற்றும் அவனது சகோதரர்கள் சிலம்பரசன்(32), மோசஸ்(29) மற்றும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(32), பனமரத்துப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்(35) ஆகியோர் இருந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மீதும் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரவுடி பட்டியலில் உள்ளனர்.

இதனிடையே அவர்கள் 5 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஜீசஸ் உள்பட 5 பேரையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்