கோட்டக்குப்பம் அருகே, பல்கலைக்கழக பேராசிரியையிடம் நகை திருட்டு - வாலிபர் கைது

கோட்டக்குப்பம் அருகே பல்கலைக்கழக பேராசிரியையிடம் நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-04 22:00 GMT
விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையை சேர்ந்தவர் வந்தியத்தேவன் மனைவி ஆனந்தலட்சுமி ஹேமலதா (வயது 45). இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சம்பவத்தன்று பணியை முடித்துக்கொண்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னமுதலியார்சாவடி எம்.ஜி.ஆர். பகுதியில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு தனக்கு தெரிந்த தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த 2 வாலிபர்கள், ஆனந்தலட்சுமி ஹேமலதா மொபட்டின் முன்பகுதியில் தொங்க விடப்பட்டிருந்த கைப்பையை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த பையில் 6 பவுன் சங்கிலியை வைத்திருந்தார். இதை பார்த்த அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் பிடிபட்ட அந்த நபரை கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா மடையன்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் மகன் சர்ஜன் (20) என்பதும் தப்பி ஓடியவர் சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த ஜோசப்ராஜ் மகன் பிரேம்ஜோசப் (26) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சர்ஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய பிரேம்ஜோசப்பை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்