விழுப்புரத்தில், ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருட்டு

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-04 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள ஜகனாதன் போலீஸ் நகரை சேர்ந்தவர் அழகரசன்(வயது 60). ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் காட்டுமன்னார்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை இவருடைய வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி செல்போன் மூலம் அழகரசனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்