கூடலூரில், தடுப்பணைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

கூடலூரில் தடுப்பணைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

Update: 2019-04-04 22:30 GMT
கூடலூர்,

தென்னகத்தின் நீர் தொட்டி, ஆக்சிஜன் வங்கி என பல்வேறு பெயர்களை கொண்ட கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதனால் இங்கு ஆண்டின் பாதி நாட்கள் மழைக்காலமாக திகழ்கிறது. இந்த நிலையில் காடுகளின் பரப்பளவு குறைதல், மரங்கள் அதிகளவு வெட்டப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பருவமழை சரிவர பெய்வது கிடையாது. இல்லையெனில் சில வாரங்களில் அளவுக்கு அதிகமாக பெய்து நின்று விடுகிறது. கடந்த ஆண்டு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தது. இதனால் அனைத்து நீர்நிலைகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. வீடுகள், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மண் சரிவால் கூடலூர்- கேரள சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதே நிலை கேரள மாநிலத்திலும் இருந்தது.

ஆனால் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்து போனது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. வடகிழக்கு பருவமழை பெய்யாமல் போனதால் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் வாழும் மக்களுக்கு ஓவேலி வனத்தில் உள்ள ஆத்தூர் ஹெலன், பல்மாடி மற்றும் பாண்டியாறு உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இதில் பாண்டியாறு தவிர மீதமுள்ள தடுப்பணைகள் மேடான இடத்தில் இருப்பதால் மின் மோட்டார்கள் உதவி இல்லாமல் இயற்கையாக குழாய்களில் தண்ணீர் வழிந்தோடி கூடலூரை அடைகிறது. இதனால் நகராட்சிக்கு எந்தவித செலவினமும் கிடையாது. ஆனால் கோடை வறட்சியால் தடுப்பணைகள் வறண்டு விட்டன. இதனால் கூடலூர் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இதற்கிடையில் வழக்கமாக கோடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கூடலூர் பகுதியில் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

கூடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய தடுப்பணைகள் வறண்டு விட்டன. இதனால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாகனங்களை கழுவுதல், கட்டுமான பணிக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தடுப்பணைகள் வறண்டு விட்டதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குடிநீர் கிடைக்காத பகுதிக்கு நகராட்சி லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்