மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

மகனை கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-04-05 22:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் மல்லியக்கரை அருகே உள்ள ஆத்துமேடு சீலியம்பட்டியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 40), ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மகன் செந்தூர்பாண்டியன். இவர் தேங்காய் பறிக்கும் வேலைக்கு சென்று வந்தார். சீரங்கனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி அவர் மதுகுடித்து விட்டு வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கும், செந்தூர்பாண்டியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீரங்கன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகனை குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீரங்கனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், மகனை கொலை செய்த குற்றத்திற்காக சீரங்கனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி மோகன்ராஜ் தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்