செந்துறை அருகே பெண் கிராம நிர்வாக அதிகாரியை தனியார் மருத்துவமனையில் வைத்து பூட்டியவரால் பரபரப்பு

செந்துறை அருகே பெண் கிராம நிர்வாக அதிகாரியை தனியார் மருத்துவமனையில் வைத்து பூட்டிய மற்றொரு கிராம நிர்வாக அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-05 23:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள துளார் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் கயல்விழி. இவர் நேற்று காலை பணியில் இருந்தபோது இவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அசாவீரன் குடிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்று தனக்கு மயக்கம் வந்துள்ளது. டாக்டர் இருக்கிறாரா? என்று கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவ உதவியாளர் முருகானந்தம் டாக்டர் மாலை தான் வருவார் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் திடீரென அங்கே வந்த அதே ஊரை சேர்ந்த அசாவீரன்குடிக்காடு கிராம நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் அவரது மகன் வணங்காமுடி ஆகியோர் இருவரையும் உள்ளே வைத்து மருத்துவமனை வாயிலின் கதவை இழுத்து பூட்டிவிட்டு இது போலி மருத்துவமனை என்று வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் மற்றும் குவாகம் போலீசார் மருத்துவ மனையின் கதவை திறந்து விட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த மருத்துவமனையின் டாக்டர், அரியலூர் அரசு பொது மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் முருகன் என்பதும், அவர் முறையாக மருத்துவ சான்றிதழ் பெற்று மருத்துவமனை நடத்தி வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் இதில் எந்த நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி தியாகராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார மருத்துவ அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தாங்கள் கூறுவது போல் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் பெண் கிராம நிர்வாக அதிகாரி கயல்விழி குவாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு மயக்கம் வந்ததால் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த அசாவீரன்குடிக்காடு கிராம நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் அவரது மகன் வணங்காமுடி ஆகியோர் என்னையும், அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளரையும் மருத்துவமனை உள்ளே வைத்து பூட்டி தகாத வார்த்தைகளால் திட்டினர் என்று கூறியுள்ளார். இதுகுறித்து குவாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் பணிபுரியும் பெண் கிராம நிர்வாக அதிகாரியை மற்றொரு கிராம நிர்வாக அதிகாரி தனியார் மருத்துவமனையில் வைத்து பூட்டிய சம்பவம் செந்துறை பகுதி அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்