புதுக்கோட்டை அருகே முதியவரை கொன்ற மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் தண்டனை மனைவி, மகனுக்கு 7 ஆண்டு ஜெயில்

புதுக்கோட்டை அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் தண்டனையும், அவருடைய மனைவி, மகனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2019-04-05 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை வரதராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்னு கவுண்டர் (வயது 70). இவருடைய மனைவி அழகம்மாள் (66). இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கொம்புராஜ் (60), மாற்றுத்திறனாளி.

அழகம்மாளுக்கும், கொம்புராஜின் மனைவி பொன்னுத்தாய் என்பவருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 27-10-2016 அன்று மாலையில் பொன்னு கவுண்டர் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கொம்புராஜ், பொன்னுத்தாய் (61), மகன் பேச்சிராஜ் (40) ஆகியோருக்கும், பொன்னு கவுண்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது கொம்புராஜ் தனது ஊன்று கோலால் பொன்னு கவுண்டரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பொன்னு கவுண்டர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ்.கவுதமன், குற்றம் சாட்டப்பட்ட கொம்புராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், பேச்சிராஜ், பொன்னுத்தாய் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யு.எஸ்.சேகர் ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்