முட்புதரில் கொன்று புதைக்கப்பட்டவர்: வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது

வாலிபரை கொன்று முட்புதரில் உடலை புதைத்த வழக்கில் மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். தன்னிடம் பறித்த பணத்தை திரும்ப தராத ஆத்திரத்தில் நண்பருடன் சேர்ந்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2019-04-05 23:30 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அருகே ராணுவத்துக்கு சொந்தமான காலி இடத்தில் முட்புதருக்குள் வாலிபர் கொன்று புதைக்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது.

இதையடுத்து பல்லாவரம் தாசில்தார் ஹேமலதா, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் முட்புதருக்குள் புதைக்கப்பட்டு இருந்த வாலிபர் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையான வாலிபர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பரங்கிமலை கம்பர் தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 27) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்டவர் பழவந்தாங்கல் பி.வி.நகரை சேர்ந்த குபேஷ் (35) என்பதும், அவர் மீது பழவந்தாங்கல் போலீசில் கொலை வழக்கு இருப்பதும் தெரிந்தது.

போலீசாரிடம் ஆனந்தகுமார் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-
பழவந்தாங்கலில் உள்ள மதுபான பாரில் நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்த என்னை தாக்கியதுடன், என்னிடம் இருந்த ரூ.24 ஆயிரத்தை குபேஷ் பறித்தார். பின்னர் எனது நண்பர் கார்த்தியுடன் சேர்ந்து குபேசை பரங்கிமலை ராணுவ மைதானத்தில் உள்ள முட்புதருக்கு அழைத்துசென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம்.

அப்போது என்னிடம் பறித்த பணத்தை திரும்ப கேட்டபோது, மிரட்டும் தோனியில் பேசியதால் குபேசை மது பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி கொன்று, உடலை அங்கேயே புதைத்துவிட்டோம். இதை நான், வாட்ஸ்-அப்பில் பரப்பியதால் மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவாக உள்ள அவரது நண்பர் கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்