திட்டக்குடியில், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - ஊதியம் வழங்க கோரி நடந்தது

ஊதியம் வழங்க கோரி திட்டக்குடியில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

Update: 2019-04-05 23:00 GMT
திட்டக்குடி,

இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சமூக சமத்துவப்படை அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்க கோரியும், ஊதியம் வழங்காவிட்டால் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த திட்டக் குடி தாசில்தார் புகழேந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சர்க்கரை ஆலையின் துணை மேலாளர் கணேச சுப்பிரமணியம், உதவி பொது மேலாளர் ஜானகிராமன், சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் இந்த மாத இறுதிக்குள் தொழிலாளர்களுக்கு முழுமையாக ஊதியம் வழங்க உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்