ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு: பருத்தி வயலில் குட்டைபோல் தேங்கி நின்ற கச்சா எண்ணெய்

திருவாரூர் அருகே பருத்தி வயலில் கச்சா எண்ணெய் குட்டைபோல் தேங்கி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-06 23:15 GMT
கொரடாச்சேரி,

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கச்சா எண்ணெய் கிணறுகளை அமைத்துள்ளது. இந்த கிணறுகள் மூலம் நிலத்துக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் வெள்ளக்குடி என்ற இடத்துக்கு குழாய் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெய் எடுத்து செல்லப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளுக்காக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வயல்களுக்கு அடியில் குழாய்களை பதித்து உள்ளது. இந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும்போது வயல்களில் கச்சா எண்ணெய் பரவி, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் கிணறுகளை புதிதாக அமைக்கக்கூடாது என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக போராட்டங்களும் நடைபெற்று உள்ளன.

திருவாரூர் அருகே கீழஎருக்காட்டூர் என்ற கிராமத்தில் செல்வராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமாக 11 ஏக்கர் பரப்பளவில் வயல் உள்ளது. இதில் அவர் 1½ ஏக்கர் வயலில் தற்போது பருத்தி சாகுபடி செய்து உள்ளார். இந்த வயலுக்கு அடியிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் கச்சா எண்ணெய் குழாய் பதித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை செல்வராஜ் தனது பருத்தி வயலுக்கு சென்றார். அப்போது வயலில் கச்சா எண்ணெய் குட்டைபோல் தேங்கி நின்றது. வயலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் பரவியது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மோகன், தேவராஜ், ரவிபாலன், ஆனந்த், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கீழஎருக்காட்டூர் சென்று பாதிக்கப்பட்ட பருத்தி வயலை பார்வையிட்டனர். இதையடுத்து கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயி செல்வராஜ் கூறியதாவது:-

கடந்த 6 மாதங்களில் இப்பகுதியில் 3-வது முறையாக கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. பதிக்கப்பட்டுள்ள குழாய்களுக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆண்டுதோறும் எங்களுக்கு வாடகை கொடுத்து வருகிறது. இருந்தாலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும்போது வேதனையாக உள்ளது.

வயல்களில் பதிக்கப்படும் எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. இதற்கு தனியாக இழப்பீடு வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் பரவிய நிலத்தை மீண்டும் சாகுபடி செய்ய வசதியாக சீரமைத்து தரவேண்டும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இதுபோன்ற குழாய்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற விதி உள்ள போதிலும், ஓ.என்.ஜி.சி. அவ்வாறு குழாய்களை புதுப்பிப்பது இல்லை.

எனவே குழாய்களை உடனடியாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பருத்தி வயலில் கச்சா எண்ணெய் குட்டைபோல் தேங்கி நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்