“மத்திய- மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்” தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

மத்திய, மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பிரசாரத்தின்போது தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

Update: 2019-04-06 23:00 GMT
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று காலையில் தூத்துக்குடியை அடுத்துள்ள முத்தையாபுரம் அத்திமரப்பட்டி, பாரதிநகர், தவசிபெருமாள் சாலை, எம்.சவேரியர்புரம், பொட்டல்காடு, குலையன்கரிசல், கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவர் எம்.சவேரியர்புரம் பகுதியில் திறந்த ஜீப்பில் இருந்து பேசிய போது கூறியதாவது;- பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுத்து உள்ளார். அதன் பயனை நாம் ஒவ்வொருவரும் அடைந்து வருகிறோம். சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக நரேந்திர மோடி முத்ரா திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு தொழிலாளர்கள் வங்கியில் கடன் உதவி பெற்று தங்களின் தொழிலை அபிவிருத்தி செய்து பயன் அடைந்து உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலங்களில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வந்தது. அவர் மறைந்த பின்பும் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்றால் அதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தான் காரணம். அவர்கள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சியும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியும் தொடர வேண்டும் என்றால் பொதுமக்கள் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் அத்திரமரப்பட்டியில் பேசும் போது, இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அது உடனடியாக நிறைவேற்றப்படும். அதே போல் இந்த பகுதியில் உள்ள விவசாயத்துக்கு தேவையான தண்ணீர், வடகாலில் உள்ள கோரம்பள்ளம் குளத்துக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்யப்படும். அதற்காக தமிழக முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’என்றார்.

அப்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, ஒன்றிய பார்வையாளர் இளங்கோவன், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தவசிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் மாலையில் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

மேலும் செய்திகள்