பயிர் இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து நடமாடும் வாக்குப்பதிவு மையத்தை புறக்கணித்த பொதுமக்கள்

திருவாடானை தாலுகா மங்கலக்குடி பகுதியில் பயிர் இழப்பீட்டுதொகை வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் நடமாடும் வாக்குப்பதிவு மையத்தை புறக்கணித்தனர்.

Update: 2019-04-06 22:35 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் பருவமழை பொய்த்து விட்டதால் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக விவசாயம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தும் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய காப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னர் மிகவும் குறைவான தொகையை வழங்கி வருவதாகவும், ஒரு வருவாய் கிராமத்திற்கு கூடுதல் தொகையும் அதன் அருகில் உள்ள கிராமங்களுக்கு மிகக்குறைந்த தொகையும் வழங்கப்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த விரக்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாடானை தாலுகாவில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடமாடும் மாதிரி வாக்குப்பதிவு மையம் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியாக சென்று பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடமாடும் மாதிரி வாக்குப்பதிவு மையம் நேற்று மங்களக்குடி பிர்க்கா பகுதியான கடம்பூர், குருந்தங்குடி, அறிவித்தி மற்றும் கூகுடி வருவாய் கிராமங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு சென்றது.

அப்போது அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுக்குரிய வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் இழப்பீடு தொகையை இப்பகுதி விவசாயிகளுக்கு முறையாக வழங்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு செய்ய இருப்பதாக தெரிவித்து நடமாடும் மாதிரி வாக்குப்பதிவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வாக்களிக்க மறுத்து விட்டனர். இதனால் நீண்ட நேரமாகியும் வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவில்லை.

அப்போது நடமாடும் மாதிரி வாக்குப்பதிவு வாகனத்தில் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மங்கலக்குடி பிர்க்கா பகுதியில் பயிர் இழப்பீட்டு தொகை பாரபட்சத்துடன் வழங்கப்படுவதுடன் இப்பகுதியில் இன்னும் ஏராளமான கிராமங்களுக்கு பயிர் இழப்பீடு தொகை முழுமையாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. இது விவசாயிகளை அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்யப்போவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த முடியாமல் அதிகாரிகள் திரும்பியுள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்