மானாமதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை திடீரென சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-06 22:41 GMT

மானாமதுரை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளன. இதையொட்டி நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் அரசியல்வாதிகள் பலரும் ரெயில்களில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு போவதாக தகவல்கள் வந்தன. அதைத்தொடர்ந்து மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் அதிரடியாக பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அதில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடமும், ரெயில் பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனை குறித்து போலீசார் கூறுகையில், தேர்தல் வாக்குப்பதிவு வரை இந்த சோதனை அடிக்கடி நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்த சோதனை நடைபெறுகிறது. அதில் பணம், பொருட்கள் ஆகியவற்றை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்